அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மான் கி பாத்) தன்னைப் பற்றி குறிப்பிடுவார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என பேச்சைத் தொடங்குகிறார், கனிகா. நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்ற மாணவிதான் கனிகா. இவரைப் பாராட்டி இன்று (ஜூலை 26) மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
இந்த உரையில், ‘நாமக்கல் பற்றி கேள்விப்படும்போது எனக்கு நினைவுக்குவருவது மிகப்பெரிய ஆஞ்சநேயர் கோயில்தான், ஆனால், தற்போது நாமக்கல் என்றாலே மாணவி கனிகாவின் பெயரும் சேர்ந்தே நினைவுக்குவருகிறது’ என்றார் பிரதமர் மோடி. இந்த பாராட்டை மாணவி கனிகா சற்றும் எதிர்பார்க்கவில்லை.
யார் இந்த கனிகா?
நாமக்கல் அடுத்துள்ள ஈ.பி. காலனி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன், ஜோதி தம்பதியின் இருமகள்களில் ஒருவர்தான் கனிகா. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் பிரதமர் மோடி இவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். அதில், கனிகாவின் வெற்றியின் ரகசியம், எதிர்கால லட்சியம் என அனைத்தையும் கேட்டு தெரிந்துகொண்டார்.
இது குறித்து கனிகாவிடம் கேட்கையில்,” பிரதமர் மோடி என்னை அழைப்பார் என்று எதிர்பார்க்கவேயில்லை, குறிப்பாக, இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டு பேசுவார் என்பதை நான் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், தனது அலுவல்களுக்கிடையில் என்னை அழைத்து பேசினார். என்னைப் போன்ற மாணவர்களை அழைத்து பேசுவது மிகப் பெரிய விஷயம். இந்த மாதிரியான பிரதமர் நம் நாட்டை ஆளுவது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.