நாமக்கல்:தைப்பொங்கல் திருநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். ஆனால், இந்த போட்டியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட யாரும் கலந்து கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக, ஒரு நவீன ஜல்லிக்கட்டு போட்டியை உருவாக்கியுள்ளனர், நாமக்கல் மாவட்ட இளைஞர் மன்றத்தினர்.
போட்டியின் விதிமுறை:ஒரு வட்டம் வரைந்து, அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள். இதன் பின்னர், போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். அந்த கயிற்றின் மற்றொரு முனை, கோழியின் ஒரு காலில் கட்டப்படும். வட்டத்தைத் தாண்டாமல் போட்டியாளர் கோழியைப் பிடிக்க வேண்டும் என்பதே விதிமுறை.
குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியைப் பிடிக்க வேண்டும், மேலும் கோழியைப் பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியைப் பிடிக்க முடியாமல் இருந்தாலோ, அவர்கள் தோல்வி அடைந்ததாகக் கருதப்படுவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தைத் தாண்டாமல் கோழி பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாகக் கருதப்படுவார்கள்.
கடந்த 17 ஆண்டுகளாக இந்த போட்டியை திருச்செங்கோடு, நந்தவன தெருவைச் சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு கோழி பிடிக்க முற்பட்டனர். இந்த போட்டி திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.