நாமக்கல் மாவட்டம்பொம்மைகுட்டை மேட்டில் 1,03,321 பயனாளிகளுக்கு ரூ.303.37 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 351.11 கோடி ரூபாய் மதிப்பிலான 315 புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், ரூ.23.70 கோடி மதிப்பிலான 60 முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 28) நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அப்போது அமைச்சர் உதயநிதி, "அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநாடு போன்று நடந்து கொண்டிருக்கிறது.
கடுமையாக உழைக்க கூடிய மக்கள் நாமக்கல் மக்கள். பல்வேறு தொழில்களால் ஒன்றிய அரசுக்கு அதிகளவில் வரிகளை கட்டும் மக்கள் நாமக்கல் மக்கள். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் மூலம் 216 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 1 கோடி மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் 1,86,706 பயனாளிகள் மக்களை தேடி மருத்துவத்தில் பயனடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.