கூட்டுறவுத் துறையின் சார்பில் 66ஆவது கூட்டுறவு வார விழா, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர், கூட்டுறவு சங்கங்களின் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ரூ.40.07 கோடி மதிப்பில் 4,915 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மகளிர் குழு, தனி நபர், மாற்றுத் திறனாளிகள் கடன் உதவிகள், சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசுகள் ஆகியவற்றையும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர். மேலும், தூய்மை வாகனங்களையும் 107 மகளிருக்கு ரூ. 26.75 லட்சம் மானியத்தில், அம்மா இருசக்கர வாகனங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 95 விழுக்காட்டினர் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி தமிழ்நாட்டில் முன்னோடியாக உள்ளதாகவும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டாம் என போராட்டம் நடத்துபவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், வங்கிகளில் வாங்கிய கடனை திருப்ப செலுத்தவில்லை என்றால் வங்கிகள் திரும்ப எப்படி கடன் வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் தங்கமணி, வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். 2021ஆம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட தொடங்கும் என்றும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:அழிந்து வரும் அடையாறுவை மீட்டெடுக்க முடியும் - ராதாகிருஷ்ணன் நம்பிக்கை!