நாமக்கல்:பரமத்தி சாலையில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த சனிக்கிழமை (செப்.16) இரவு உணவு உட்கொண்ட 43 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து சம்மந்தப்பட்ட உணவகத்திற்கு ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில், ஷவர்மா தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட இயந்திரம் சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் தற்காலிகமாக ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்றவை விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று (செப்.19) உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் இந்த சோதனையானது நடைபெற்றது. தொடர்ந்து, நாமக்கல், சேலம் சாலையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் காய்கறிகள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.