நாமக்கல்: பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்தர். ஜவுளி தொழில் செய்து வரும் இவர், கடந்த ஆண்டு ஈரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அபிராமி(31) என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருமணமான சில தினங்கள் முதலே ராகவேந்தர் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, அபிராமி தனது தந்தை வீட்டிலிருந்து கொண்டு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதையடுத்து நேற்று வேலைக்குச் சென்ற அபிராமி, ‘உடல் நலம் சரியில்லை வீட்டிற்குச் செல்வதாக’ கூறி கணவர் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அபிராமி குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி குடும்பத்தினர், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சென்று, மகள் அபிராமி சடலத்தை கண்டு கதறி அழுதனர். இதன் பின்னர் ராகவேந்தர் குடும்பத்தினர் கொடுத்த கொடுமை காரணமாக அபிராமி தற்கொலை செய்து கொண்டார் எனவும் மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அபிராமியின் தந்தை, சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.