தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல' - வேதனைப்படும் தென்னை விவசாயிகள் - தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி

’பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய பெத்தா இளநீரு’ என்ற வரிகள் தற்போது மருவி தென்னைய பெத்தாலும் கண்ணீருதான் என்ற நிலைக்கு மாறிவிட்டது. ’பெத்த பிள்ள சோறு போடாது, ஆனா நட்ட பிள்ள சோறு போடும்’ என்று பழமொழி சொல்லி தென்னம்பிள்ளையை நடவுசெய்த விவசாயிகள் தற்போது தாங்கள் கூறிய பழமொழியை மறுபரீசீலனை செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆம், அவ்வாறுதான் அவர்களின் எண்ணவோட்டத்தைத் திசைதிருப்பியுள்ளது கரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.

namakkal coconut farmers
namakkal coconut farmers

By

Published : Jul 4, 2020, 12:30 PM IST

Updated : Jul 16, 2020, 5:55 PM IST

2016ஆம் ஆண்டு இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேராளாவைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்திருந்தது தமிழ்நாடு. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மட்டுமே பிரதானமாக இருந்த தென்னை விவசாயம், ஒரு காலகட்டத்திற்குப் பின் பட்டுக்கோட்டை, நாமக்கல், தேனி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலானதே அதற்குக் காரணம்.

அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதிகளவில் தேங்காய் உற்பத்தி நடைபெற்றது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 9 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்றுவருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல 5 கோடிக்கும் மேலான தென்னை மரங்கள் இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குவிந்துகிடக்கும் மட்டை உரித்த தேங்காய்கள்

சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு தென்னை மரத்திலிருந்து 140 காய்கள் கிடைக்கும் என்றாலும், தமிழ்நாட்டில் குறுகிய காலத்தில் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரியமான தென்னை வகைகளையே விவசாயிகள் நடவு செய்கின்றனர். இதனால் சராசரியாக ஒரு மரத்திலிருந்து 300 காய்கள் வரை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இளநீர், கொப்பரை, உடை தேங்காய் என மூன்று வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இதுதவிர எண்ணெய் உற்பத்தி ஆலைகளுக்கும் கொப்பரை தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பரமத்திவேலூர், சேந்தமங்கலம், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்குள்ள 40க்கும் மேற்பட்ட சேமிப்புக் கிடங்குகளிலிருந்து குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

நன்றாகச் சென்றுகொண்டிருந்த தேங்காய் உற்பத்தியும் ஏற்றுமதியும் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொய்வைக் கண்டுள்ளன. ஊரடங்கால் கோயில் திறப்புக்குத் தடை விதிக்கப்பட்டு திருவிழாக்கள் நடைபெறாததும் தேங்காய் விற்பனையில் பெருமளவு சரிவை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான தேங்காய் விற்பனை இல்லை என்று வருத்தப்படும் பரமத்திவேலூர் தென்னை விவசாயி தங்கவேல், “நான் 5 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்துகொண்டிருக்கிறேன். தற்போது கரோனா ஊரடங்கால் தேங்காய் பறிப்பதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. ஆட்கள் கிடைத்தாலும் தேங்காய்களை விற்பனை செய்ய முடிவதில்லை. வியாபாரிகளிடம் ஏற்கனவே நிறைய தேங்காய்கள் வெளியே செல்லாமல் ஸ்டாக்கில் இருப்பதால், அவர்களும் தேங்காயை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார் கவலையோடு.

எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறும் மற்றொரு விவசாயி குப்புசாமி, “தென்னை நீண்ட கால பயிர் என்பதால் நம்பி தென்னையை நடவுசெய்தேன். ஏற்கனவே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தால், ஆட்கள் பற்றாக்குறை இருந்துவந்தது. இந்த ஊரடங்கு அதனை மேலும் அதிகரித்துள்ளது. வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் எங்களுக்கு அரசுதான் நிவாரணம் வழங்கி கைதூக்கி விட வேண்டும்” என்றார்.

ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் தேங்காய்கள் தேங்கிக் கிடப்பதாகக் கூறும் தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜெகநாதன், “கடந்த ஆண்டு தேங்காய் விற்பனை அமோகமாக இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் இந்தாண்டு தேங்காய்களைப் பறித்து, அதனை உரித்துப் போட்டு வைத்திருந்தோம்.

'மலையாய் குவிந்துகிடக்கும் தேங்காய்கள்; இப்போ நட்ட பிள்ளயும் சோறு போடல'

ஆனால், மார்ச் 25இல் தொடங்கிய லாக்டவுனால் தேங்காய் விற்பனை கடும் இழப்பைச் சந்தித்துள்ளது. நாடு முழுவதும் திருவிழாக்கள், சுப நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதே இதற்கு மிக முக்கியக் காரணம். இதனால் 400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பிறகே இந்தத் தொழில் மீண்டெழும்” என்றார்.

தென்னை விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை ரத்துசெய்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கினால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறி பேசிமுடித்தார் ஜெகநாதன்.

இதையும் படிங்க:'சொற்ப வருமானம் கூட இன்றி உடைந்த சிற்ப கலைஞர்கள்'

Last Updated : Jul 16, 2020, 5:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details