நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்தவர் பூங்கோதை. இவர் எருமப்பட்டி, தூசூர், அலங்காநத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதிப்பெற்றுத்தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் இராண்டாயிரம் முதல் ஆறாயிரம் வரை பணம் வசூலித்து ஏமாற்றி வந்துள்ளார். பணம் குறித்து அவரிடம் சம்பந்தப்பட்டவர் கேட்டதற்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம்: பல லட்ச ரூபாய் மோசடி - கைது
நாமக்கல்: பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற்றுத்தருவதாகக் கூறி நூற்றிற்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நித்யா என்பவர் பூங்கோதையிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால் எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு எருமப்பட்டி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரமூர்த்தி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சுபாஷ் சம்பந்தப்பட்ட பூங்கோதையிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், பூங்கோதையை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1இல் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.