நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுத் திருவிழா, கடந்த மாதம் 12ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினசரி காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆகியவை நடைபெற்று வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மை அழைப்பு நிகழ்ச்சி இன்று(மார்ச்.1) நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தீமிதி விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு 21 அடி நீளத்திலும், 4 அடி அகலத்திலும், தீ இட்டு வைக்கப்பட்டிருந்த குண்டத்தில், தலைமை பூசாரி பூங்கரகத்துடன் இறங்கி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் 'ஓம்சக்தி, பாரசக்தி' என கோஷமிட்டபடியே தீ மிதித்து காளியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.