நாமக்கல்:தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. இங்குள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்து மகிழவும், பிரசித்திப் பெற்ற அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளிட்டவற்றுக்குச் செல்லவும் 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து பிற மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர்.
இம்மலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு நாளன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா எடுக்கப்படும். அதனை முன்னிட்டு அலுவலர்கள், பல்வேறு அமைப்பினர் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவிப்பர்.
மேலும் ஆடிப்பெருக்கு விழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். மேலும் அங்குள்ள கலையரங்கில் பல்துறை விளக்கக் கண்காட்சிகள், தோட்டக்கலைத் துறையின் மலர் கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சமூகநலத் துறை சார்பில் பெண்கள், சிறுவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் இரண்டு நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.