முக்கனிகளில் ஒன்றான பலாவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வாழ்வு இந்தாண்டு மிகுந்த கசப்புடன் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டர் உயரத்தில் சுற்றுலா தலமாக அமைந்துள்ள கொல்லிமலைப் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் மரவள்ளி, பலா, வாழை, அன்னாச்சி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துவருகின்றனர். குறிப்பாக 50ஆண்டுகள் பலன்தரக்கூடிய பலா மரங்களை தங்களது தோட்டங்களிலும் வீட்டின் பின்புறமும் நட்டு வளர்த்துவருகின்றனர். ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம்வரை பலா சீசன் என்றாலும், தற்போது வியாபாரம் ஒன்றும் சிறப்பாக அமையவில்லை.
இந்தாண்டு பலா விளைச்சல் அதிகரித்திருந்தாலும், போதிய அளவு விலை கிடைக்கிவில்லை என பலா விவசாயிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர். கடந்தாண்டு பலா ஒன்று 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது பத்து ரூபாய்க்கு மேல் விற்பனையாகவில்லை எனக் கூறும் விவசாயிகள், கொல்லிமலைப் பகுதியில் உள்ள பழச்சந்தைகள் மூடப்பட்டதாலும், போக்குவரத்து முடக்கப்பட்டதாலும் விளைச்சல்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லமுடியாமல் தவிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய வேளிக்காடு பகுதியைச் சேர்ந்த பலா விவசாயி ஜெய்சங்கர், " கொல்லிமலையில் உள்ள தட்பவெட்பநிலைக்கு பலா மரங்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. மேலும், இப்பகுதி பலாவிற்கு அதிக சுவை இருப்பதால் கொல்லி மலை பலாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்தாண்டு நல்ல விளைச்சல் சமயத்தில் கரோனா ஊரடங்கு இருப்பதால் விளைச்சல்களை வாங்க ஆள் இல்லை.