கொல்லிமலை வாழ் பழங்குடி மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அய்யாறு நீரை கொண்டு 338 கோடி ரூபாய் மதிப்பில் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம், கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வளப்பூர் நாடு கிராம பகுதிகளில் உள்ள அய்யாறு ஆற்று கிளை ஓடைகளின் குறுக்கே அச்சங்காடுபட்டி, கோவிலூர், தெளியங்கூடு, இருங்குளிப்பட்டி மற்றும் காடம்பள்ளம் ஆகிய 5 இடங்களில், கலிங்குகள் அமைத்து மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பயன்படுத்தி, 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மழைநீரை இருங்குளிப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் கலிங்கிலிருந்து 1953 மீட்டர் தூரம் சுரங்கம் அமைத்து, செல்லிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கிருந்து குழாய் மூலம் கொல்லிமலையின் தெற்குப்பகுதியில் உள்ள அடிவாரத்தில் நீர்மின் நிலையம் அமைத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மின் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட நீரை மீண்டும் அய்யாறு ஆற்றிலேயே விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.