நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் குழு சார்பில் ஜல்லிக்கட்டு விழா இன்று (பிப்.7) நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமை வகித்தார்.
அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்தப் போட்டியினை மாநில மின்சாரம் மற்றும் மதுவிலக்கு-ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம்-சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.
முன்னதாக, அமைச்சர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 690 காளைகள் பங்கேற்க, 400 மாடுபிடி வீரர்கள் அவற்றை அடக்கினர்.
சீறிப்பாய்ந்த காளைகளுடன் சிறப்பாக நடந்த ஜல்லிக்கட்டு இப்போட்டியில் லேசான காயம் அடைந்த ஐந்து பேருக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இப்போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு நாமக்கல், சேலம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.