நாமக்கல் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரிந்துவரும் நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்ட 14 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு முக்கியக் குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது தொடர்பான புத்தாக்க பயிற்சி 15 நாள்களுக்கு ஆயுதப்படை அலுவலக அரங்கத்தில் அளிக்கப்படுகிறது.
இதில் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு பயிற்சிகளை எடுத்துரைத்தார்.
அவர், காவல் துறையில் பதிவாகும் வழக்குகளை சிறந்த முறையில் எவ்வாறு புலன் விசாரணை செய்தல், உரிய காலகட்டத்தில் வழக்குகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்.
மேலும், சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, மது விலக்கு, இணைய குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் எவ்வாறு திறம்பட புலன் விசாரணையை மேற்கொள்வது குறித்தும் விளக்கமளித்தார்.
இப்பயிற்சியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து பயிற்சிகளை அளிக்க உள்ளனர். காவல் சரக அளவில் நடைபெற்றுவந்த இப்பயிற்சி, கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இம்முறை மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடத்தப்படுகின்றது.