நாமக்கல்லில் அகிம்சா சோஷிலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர் காந்தியவாதி ரமேஷ். இவர் மகாத்மா காந்தியின் கோட்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் காந்திபோல் உடை அணிவது வழக்கம். இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் மனு ஒன்றை அளித்தார்.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ரமேஷ் ஒற்றை காலில் நின்றுகொண்டு தேர்தல் ஆணையமே வாக்காளர்களுக்கு பணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து வேட்பாளர் ரமேஷ் கூறும்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. அனைத்து கிராமங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் தடுப்பதில்லை. எனவே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய மிகவும் எளிமையான வழி என்னவென்றால் விவி பேட் இயந்திரத்தின் அருகே ஏடிஎம் இயந்திரத்தை போல் ஒரு இயந்திரத்தை வைத்தால், வாக்காளர்கள் வாக்களித்த பின்பு அந்த இயந்திரத்தின் வாயிலாக ஒருவருக்கு ரூ.2000 வீதம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நூறு சதவீதம் வாக்குகள் பதிவாகும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவில் யோசனை கூறியுள்ளார்.
இதன்மூலம் தேர்தல் ஆணையம் 100% வாக்களிப்புக்கான செலவுகள் பல கோடியும் மிச்சப்படுத்தலாம் எனவும் அவர் மனுவில் அறிவுரை கூறியுள்ளார். தினந்தோறும் புதுமையான முறையில் தன்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதன் மூலமாக காந்தியவாதி ரமேஷ் நாமக்கல் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.