கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதனால் பல துறைகளில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து, பலர் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பல நடுத்தர வர்க்கத்தினர் யாசகர்களாக அவதாரமெடுத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருப்பினும் முதியோர்கள் தாங்கள் பெற்றெடுத்த மகன், மகளால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர்களாக உரிய அரவணைப்பின்றி சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களின் வாசல்கள் என அனைத்துப் பகுதிகளிலும் யாசகர்களாக தங்களின் நாள்களை நகர்த்தி வருகின்றனர்.
இது குறித்து நாமக்கல் பேருந்து நிலையத்தில் யாசகராக உள்ள டைட்டஸ் ஜெயராஜ் கூறுகையில், 'எனக்கு 73 வயதாகிறது. கரோனா ஊரடங்கினால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் தங்கிவிட்டேன். சொந்த ஊருக்குச் செல்லவும் மனமில்லை. கரோனாவால் எனது வேலையும் பறிபோன நிலையில் தினசரி யாசகம் பெற்று, வாழ்க்கையை நடத்தி வருகிறேன்' எனத் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து மாற்றுத்திறனாளி யாசகர் ராஜூ கூறுகையில், 'நான் பார்வையற்றோர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றுள்ளேன். முன்னதாக நான் பழைய பாடல்களைப் பாடி ஒரு நாளைக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்து வந்தேன். ஆனால், தற்போது கரோனா தொற்றால் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டு, ஒருவேளை உணவிற்குகூட வழியின்றி தவித்து வருகிறேன்' எனத் தெரிவித்தார்.