தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாணைப்பிடிப்பதுபோல் பூட்டியவீட்டை நோட்டமிட்டு  திருடியவர் கைது! - பல்வேறு கொள்ளை வழக்கில் நாமக்கல்லில் ஒருவர் கைது

நாமக்கல்: பகலில் சாணைப் பிடிப்பது போல் நோட்டமிட்டு, இரவில் வீடு புகுந்து திருடிய நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நபர் கைது

By

Published : Sep 29, 2019, 7:35 AM IST

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலையில் பூட்டியிருந்த ஒரு வீட்டில் பூட்டை உடைத்து நுழைந்து கடந்த ஜூன் 26ஆம் தேதியன்று இரவில் 18 சவரன் தங்க நகைகளும் திருடப்பட்டதாகவும், அன்று இரவே, அதே பகுதியில் பூட்டியிருந்த மற்றொரு வீட்டில் ஒன்பது சவரன் தங்க நகையுடன் பணம் ரூ. 50 ஆயிரமும் திருடப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று இரவு அண்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து ஒன்பது சவரன் தங்க நகைகளும், அடுத்து ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று உரம்பூர் பகுதியில் ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்றதாக அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் நாமக்கல் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின்படி குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சோழசிராமணி அருகில், தனிப்படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஒருவர் காவல்துறையினரைக் கண்டதும் திரும்பி செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரைத் தனிப்படையினர் பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் பூச்சி கண்ணன் (எ) அருண்ராஜ் என்றும்; ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் பூச்சிக்கண்ணனும், அவரது கூட்டாளிகள் முனியாண்டி (42), முத்து முருகன் (40), ஆகிய மூவரும் சேர்ந்து பள்ளிபாளையத்தில் தங்கிக் கொண்டு, பகலில் சாணைப் பிடிப்பது போல் சென்று, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் வீட்டின் பூட்டுகளை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றனர். அதேபோல்,மூவரும் கபிலர்மலை பகுதியில் ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருடியதையும், வேலூர், கொளக்காட்டுப்புதூரில் உள்ள வீட்டில் திருடியதையும் மற்றும் வேலூர், உரம்பூர் பகுதியில் ஒரு வீட்டில் நுழைந்து திருடியதையும் ஒப்புக் கொண்டனர்.

நாமக்கல் பரமத்தி காவல்நிலையம்

அதைத் தொடர்ந்து பூச்சிக் கண்ணனைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 24½ சவரன் தங்க நகைகளைக் கைப்பற்றிய பின் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட முனியாண்டி, முத்துமுருகன் ஆகிய இருவரும் ஏற்கனவே பட்டுக்கோட்டை பகுதியில் திருடியது சம்மந்தமாக கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

செல்போன் திருடிய சிறுவர்களை மடக்கி பிடித்த காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details