தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்னது கிரிப்டோ கரன்சியா... அப்படின்னா என்னன்னே தெரியாதுங்க! - தங்கமணி

அதிமுகவைப் பழிவாங்கவே தன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்ததாகவும், கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்றே தனக்குத் தெரியாது என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி
முன்னாள் அமைச்சர் தங்கமணி

By

Published : Dec 16, 2021, 7:57 AM IST

நாமக்கல்: அதிமுகவைச் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குத் தொடர்புடைய 69 இடங்களில் நேற்று (டிசம்பர் 15) காலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கணக்கில் வராத இரண்டு கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய், கைப்பேசிகள், பல வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களின் திறவுகோல்கள், ஹார்டு டிஸ்க்குகள், ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

சொன்னதைச் செய்த செந்தில்பாலாஜி

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய தங்கமணி, "அதிமுகவை பழிவாங்கவே என் வீட்டிலும் யார் என்றே தெரியாதவர்கள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை என்ற பெயரில் கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயலுகின்றனர்.

இந்த இயக்கத்திற்கு வலுசேர்க்கக் கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுகிறது. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அதிமுக ஒன்றியச் செயலாளரிடம், 'தங்கமணி, அவரது மனைவி மகனை வேரறுப்பேன்' எனத் தெரிவித்துள்ளார். அதைத்தான் இப்போது அவர் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி

என்னது கிரிப்டோ கரன்சியா?

நான் 2006ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல்செய்ததிலிருந்த சொத்துகள் மட்டுமே உள்ளன. எனது மகன் தொழில் செய்கிறார். ஆயிரம் செந்தில்பாலாஜி வந்தாலும் எங்கள் இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. நீதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.

சட்டப்படி இவற்றை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். திமுகவைக் கண்டித்து நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தைக் குலைக்கவும், உள்கட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் திமுக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. அதில் முதலீடு செய்வது எப்படி என்பது கூட தெரியாது. என் நெஞ்சில் நேர்மை உள்ளது. இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் சமயத்தில் அதிமுக இன்னும் வேகம் எடுத்து வளரும்.

மீண்டுவருவோம்

எனது வீட்டிலிருந்து ஒரு செல்போன் மட்டுமே எடுத்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் நாங்கள் மீண்டுவருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

தங்கமணி முறைகேடு செய்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க:முறைகேடு பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தங்கமணி?

ABOUT THE AUTHOR

...view details