நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா நேற்று (நவ. 26) நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதன்பின் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய அரசியலமைப்பு தினத்தில் நாமக்கல் அரசு சட்ட கல்லூரியை தொடங்குவது சிறப்பு. மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். சைபர் குற்றம், இணையவழி குற்றம், பொருளாதார குற்றம், வணிக குற்றம் நடைபெறும் நிலையில் அதற்கேற்ப சட்டக் கல்லூரியில் பாடங்கள் அமைக்கப்படும். அக்குற்றங்களை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று யார் வேண்டுமானலும் சட்டம் படிக்கலாம் என்கிற அளவிற்கு சட்டக் கல்லூரிகள் உள்ளன என தெரிவித்தார்.