நாமக்கல்:தனியார் உணவகத்தில் உணவருந்திய சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 19 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் பரமத்தி சாலையில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை (செப்.16) அன்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் 13 பேர் இந்த உணவகத்திற்கு உணவருந்த சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சவர்மா மற்றும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு இரவு கல்லூரி விடுதிக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உணவருந்திய 13 மாணவ மாணவிகளுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் பாதிப்பு உபாதைகள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
உடனடியாக விடுதி காப்பாளர் மாணவ மாணவிகளை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். சிகிச்சையில் இரவு உணவகத்தில் உட்கொண்ட உணவால் மாணவ மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த கவிதா, தனது மகள் கலையரசி, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் அதே கடையில் சவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கும் வாந்தி, மயக்கம், காய்ச்சல் போன்ற அதே அறிகுறிகளோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.