நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டை புதூரைச் சேர்ந்த கவிதா கடந்த மாதம் தனது மகள் கலையரசி, மகன் பூபதி, தாய் சுஜிதாவுடன் தனியார் கடையில் ஷவர்மா மற்றும் பிரியாணி சாப்பிட்டு உள்ளனர். பின்னர், வீடு திரும்பிய நிலையில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம், காய்ச்சல் ஆகியவை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால், அங்கிருந்த செவிலியர்களால் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளித்து அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், மீண்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தார். மேலும், ஷவர்மா சாப்பிட்டு 43 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்ற உணவு வகைகள் விற்பதற்கு மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் நகர ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் நகரில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.