நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தீநுண்மியால் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
அதையடுத்து கடந்த 21 நாள்களாக கரோனா தீநுண்மி பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் இருந்துவந்தது. அதனால் நாமக்கல் சிவப்பிலிருந்து ஆரஞ்சு மண்டலமானது.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கூட்டப்பள்ளிக் காலனியைச் சேர்ந்த 49 வயது லாரி ஓட்டுநர் ஒருவர் ஆந்திர மாநிலம் சென்றுவிட்டு மே 27ஆம் தேதி ஊர் திரும்பினர். அதன்பின் அவருக்குத் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனதால் மே 28ஆம் தேதி திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அவரைப் பரிசோதனை செய்தபோது அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து தனியார் மருந்துவ நிர்வாகம் அரசு சுகாதாரத் துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அதையடுத்து அவரை சுகாதாரத் துறை அலுவலர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சேர்த்து கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் அவருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சிகிச்சைப் பெற்றுவந்த அவருக்கு நேற்றிரவு உடல்நிலை மோசமானது. அதனால் அவர் தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். மேலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு திருமண விழாவிற்காக மும்பையிலிருந்து வந்த மூவருக்கு இன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தீவிரமடையும் கரோனா - 2ஆவது முறையாக மருத்துவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை