தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் பைனான்சியர் அடித்துக்கொலை.. பின்னணி என்ன?

நாமக்கல்லில் 20 லட்சம் ரூபாய்க்காக நிதி நிறுவன அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 லட்சத்துக்காக கடத்தப்பட்ட பைனான்சியர்
20 லட்சத்துக்காக கடத்தப்பட்ட பைனான்சியர்

By

Published : Mar 7, 2023, 11:02 AM IST

நாமக்கல்: மோகனூர் அருகே உள்ள தண்ணீர்ப் பந்தல் குமரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (39) சத்யா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சரவணன் தனது தோழி மகாலட்சுமியுடன் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பொதுமக்களுக்குக் கடனாக வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்து வந்தனர். கிடைத்த லாபத்தை கமிஷன் அடிப்படையில் இருவரும் பிரித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சரவணனை மர்ம கும்பல் ஒன்று கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளது. அங்குள்ள விடுதி ஒன்றில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் சரவணனை அடைத்து வைத்து 20 லட்சம் பணம் கேட்டு கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுதாகவும் மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன சரவணன், செல்போனில் தனது மனைவி சத்யாவைத் தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சத்யா, உடனடியாக தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி பணத்துக்கு ஏற்பாடு செய்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து சரவணன் தனது பங்குதாரர் மகாலட்சுமியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும் உடனே பணத்தைத் தயார் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், பணம் வருவதற்கு 3 நாட்கள் தாமதமானதால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் சரவணனைக் கடுமையாக அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாகச் சரவணன் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு சரவணனின் உடலை அந்த அறையிலேயே போட்டு விட்டு அங்கிருந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றுள்ளனர். அதன் பிறகு அறையில் சடலம் இருப்பதைப் பார்த்த விடுதி மேலாளர் இதுகுறித்து வாழவந்திநாடு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விஏஓ ஆய்வு செய்ததில் சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்ததும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வாழவந்திநாடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து சரவணனின் உடலை மீட்ட போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலைக்கான பகீர் காரணம் தெரியவந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சரவணனிடம், அவருக்கு தெரிந்த நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அணுகி பெரிய அளவில் பணம் தருகிறேன். மேலும் இந்த பணத்தை நிதி நிறுவனம் மூலம் வட்டிக்கு விட்டு அதில் கிடைக்கும் வட்டி பணத்தை கமிஷன் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை சரவணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பேசியபடி சரவணன் இந்த பணத்திற்கான வட்டி பணத்தை அந்த நபரிடம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் தான் கொடுத்த பணத்தை அந்த தொழிலதிபர் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சரவணனும் ஏதேதோ காரணம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை கேட்டும் பணத்தைக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த தொழிலதிபர் சரவணனைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சரவணன் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மனைவி சத்யா, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். தற்போது மருத்துவமனை முன்பு ஏராளமான உறவினர்கள் திரண்டதால் அப்பகுதியே பதற்றமாக காணப்படுகிறது. ஆகையால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக - ஆந்திர எல்லை மலைப்பகுதியில் திடீர் காட்டுத் தீ!

ABOUT THE AUTHOR

...view details