காவிரி, பொன்னி ஆறு, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று திருச்செங்கோடு அருகே உள்ள எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், ' மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை ஏரி குளங்களில் நிரப்பவும்; காவிரி ஆறு, பொன்னி ஆறு, திருமணிமுத்தாறு ஆகியவற்றை இணைக்க வலியுறுத்தியும் கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டும், தற்போது உள்ள அரசு இத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதனை கருத்தில் கொண்டு தான், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்' எனத் தெரிவித்தார்.