நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வாதாடுவதற்கு வந்துள்ளார். அவர் கொடுத்த மனுவில் உள்ள பார் கவுன்சில் எண்ணை எதிர்தரப்பு வழக்கறிஞர் சோதனை செய்ததில் அவர் வழக்கறிஞர் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர் போலி வழக்கறிஞரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் சாணர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன கண்ணன் என்பதும், மாற்றுத்திறனாளியான இவர் தொடர்ந்து அரசு அலுவலர்களை மிரட்டுவது, காவல்நிலையத்தில் கட்ட பஞ்சாயத்து செய்வது, அரசியல் நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.