நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிச.24) நடந்த முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளில் இருந்து 5 காசுகள் உயர்ந்து, 5 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே அதிகப்பட்ச விலை ஆகும். மேலும், இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், “கடந்த சில நாட்களாக கோழிப்பண்ணை தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், சோயா போன்றவற்றின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.
எனவே, முட்டையின் கொள்முதல் விலையை அதிகபட்சமாக 5 ரூபாய் 70 காசுகளுக்கு உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலும், உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை துவங்கி உள்ளதால், முட்டைக்கான தேவையும் அதிகரித்துள்ளது. தற்போது குளிர்காலம் என்பதால், பண்ணைகளில் குறைவாகவே முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, உற்பத்தி குறைந்து தேவை அதிகரிப்பே முட்டையின் விலை உயர்வுக்கு காரணம்” என்றனர்.
மேலும், சில்லறை விற்பனையில் நாமக்கல்லில் ஒரு முட்டை 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசு வரையிலும், சென்னையில் 6.50 முதல் 7 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு தெரியுமா?