நாமக்கல்:காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக நேற்று (ஆக. 6) சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குமாரபாளையம் சென்றார்.
நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் இருந்தபோதிலும், இல்லாத நேரத்திலும் பொதுமக்களின் நலன் ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்படுகின்றன.மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரியில் கடந்த 5 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் திமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளது.
மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக குடும்ப நலனை மட்டுமே திமுகவினர் முன்னிறுத்தி வருகின்றனர். குமாரபாளையம் பவானி உள்ளிட்ட பகுதிகள் காவிரி ஆற்றில் மிகவும் தாழ்வான பகுதிகளில் உள்ளதால் அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
பின்னர் கலைமகள் வீதி ஆற்றோர பகுதிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி வெள்ளம் புகுந்த வீடுகளை பார்வையிட்டார். பின்னர் ஜே.கே.கே.நடராஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகளையும் வழங்கினார்.
இதையடுத்து பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி,"நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் காவேரி கரையோரங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வசித்த பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் நோட்டு புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி விட்டதால் அதற்கு மாற்றாக அரசு உடனடியாக, நோட்டு, பாட புத்தகங்களை வழங்க வேண்டும்.
திமுக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால்தான் பொதுமக்கள் வெள்ள நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதிய மருத்துவ வசதியும் செய்து தரப்படவில்லை. அங்கு கொசுத்தொல்லை அதிகமாக உள்ளதால், நோய் பரவலை தடுக்க உடனடியாக போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 300 ஏக்கர் வாழை, 300 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஐந்து நாட்கள் காவேரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அங்கு வசித்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஒருவர் கூட, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவோ, நிவாரண உதவிகள் வழங்கவோ இல்லை. இன்று நான் வருவதை அறிந்து அமைச்சர்கள் சிலர் அவசரகதியில் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
அதிமுக ஆட்சியின்போது காவேரி ஆற்றின் குறுக்கு 3 தடுப்பணைகள் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு அந்த மூன்று தடுப்பணை திட்டத்தையும் கைவிட்டது. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றிட வேண்டும். நீர் சேமிப்பு திட்டங்களில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
மேட்டூர் உபரிநீரை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ. 560 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் முதற்கட்டமாக 6 ஏரிகளில் மேட்டூர் உபரி நீர் நிரப்பப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப்பின், இத்திட்டம் ஆமை வேகத்தில் செயல்படுத்தி வருகிறது” என குற்றஞ்சாட்டினார்.
ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையில் ஊழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அது ஒரு மெகா ஊழல், விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஒரே ஒரு பாக்கெட்டில் மட்டும் அளவு குறை என்பது வெறும் பொய். மக்களுக்கு வழங்கும் பாலில் கூட ஊழல் செய்யும் ஒரே அரசாங்கம் இந்த திமுக அரசாங்கம்தான்" எனவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது தேச துரோகமா..? ஒரே மதம், ஒரே மொழி என்பது தேசவிரோதமா..? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி