நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறையில் நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, மாவட்ட ஆட்சியர் மேகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.
மின்துறை அமைச்சர் தங்கமணி பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனையிலிருந்து அனுப்பும் நோயாளிகளை முழுமையான உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லையெனில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.
மூன்று வண்ண அட்டை மூலம் வாரத்தில் இரண்டு நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த நாட்களில் அவர்கள் வெளியே சென்று பொருள்களை வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. முழுமையாக தனிமைப்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வாக உள்ளது. சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இதற்காகத்தான் மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற ஏற்பாட்டை செய்துள்ளார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இன்று மாலைக்குள் அனைவருக்கும் மூன்று வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுவிடும், வரும் 14ஆம் தேதிவரை தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க இந்த அட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்று தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 14-ம் தேதி வரை ஊரடங்கு உள்ளதால், அதற்குப் பின்னால்தான் முதலமைச்சருடன் கலந்து முடிவு செய்யப்படும். என்றார்.
இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு இறுதி சடங்காக மாறும் ஊரடங்கு: உதவுமா அரசு?