நாமக்கலில் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் திமுக இளைஞரணி பொது செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அப்போது, உங்களில் ஒருவனாக இருந்து கட்சி பணியாற்ற ஆசைப்படுகிறேன். திமுக இளைஞரணியின் ஒவ்வொரு போராட்டமும் பெரும் வெற்றியை தேடி தரும். பொதுமக்கள் அளித்த வரவேற்பு தேர்தல் பரப்புரையை தொடங்கியதுபோல் உள்ளது. 4,500 பேர் மட்டுமே இருந்த இளைஞரணியில் இன்று 2.75 லட்சம் பேர் மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நமது ஒரே இலக்கு திமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற செய்து ஸ்டாலினை முதலமைச்சராக்குவதுதான் என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
துரைக்கண்ணு குடும்பத்தினரிடம் பணத்தை வாங்கிக்கொண்டுதான் அவரது சடலத்தை ஒப்படைத்ததாக அவரது குடும்பத்தினரே புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு முதலமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கு முழுமையாக விசாரணை நடத்தவேண்டும்.
ஸ்டாலின் மீது வழக்கு இருப்பதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.