2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கொண்ட குழுவினர், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோழி பண்ணையாளர்கள், லாரி உரிமையாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், கோவிட்-19 தொற்று ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்நாடு அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், அதே நிலை தான் பள்ளிகள் திறப்பு விவகாரத்திலும் நடத்துள்ளதாக விமர்சித்தார்.
பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவுக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துபவர்கள், வேல் யாத்திரைக்கு விதித்திருக்கும் தடை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என தெரியாது, அதற்கு எந்த அடிப்படையில் தடை விதித்தார்கள் என்பது குறித்து ஆட்சியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய இளங்கோவன், ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.