மத்திய அரசு நிதியில் நகராட்சியில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்யவும், விளக்கம் கேட்கவும் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமாலை சந்திக்க நேற்று (ஜூலை 21) நகராட்சி அலுவலகத்திற்கு எம்பி சின்ராஜ் வந்தார். அவருடன் உதவியாளர் சிலரும் வந்திருந்தனர். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்.
நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ பொன். சரஸ்வதி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் என பலரும் மற்றொரு அறையில் இருந்தனர். எம்எல்ஏவுடன் வந்தவர்கள் அமர நாற்காலி போதாததால் ஆணையாளர் அறையில் இருந்து நாற்காலிகளை எடுக்க அதிமுகவினர் இருவர் சென்றனர். இதனை எம்பியின் உதவியாளர் கண்டித்துள்ளார்.
எம்பி பேசிக்கொண்டிருக்கும் போது நாற்காலியை காரணம் காட்டி ஏன் வருகிறீர்கள் வேறு நாற்காலிகள் நகராட்சியில் இல்லையா என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் உருவானது. இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரவி எம்பியின் காருக்கு முன்பு படுத்து போராட்டம் இதையடுத்து, டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் காவல் துறையினர் நகராட்சி அலுவலகம் வந்து இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் நகராட்சியில் இருந்து புறப்பட்ட எம்பி சின்ராஜை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரவி, நகர மகளிர் அணி துணை அமைப்பாளர் கல்பனா உள்ளிட்ட சுமார் 30 அதிமுகவினர் முற்றுகையிட்டனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரவி எம்பியின் காருக்கு முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் எம்பி ஆதரவாளர்கள் மற்றும் எம்எல்ஏ ஆதரவாளர்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காருக்கு முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ரவியை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து, எம்பி சின்ராஜ் நகராட்சி அலுவலுகத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார். நாமக்கல்லில் எம்பி, எம்எல்ஏ இடையே நடந்து வந்த பனிப்போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்தல்ல’ - எல். முருகன்