நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுபவர் வெங்கடாசலம். நூற்பாலை அதிபரான இவர் அதிமுக வேட்பாளரான அமைச்சர் தங்கமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்கடாசலத்தின் நண்பர்கள் ரத்தினகிரி டெக்ஸ் சங்கர், வெங்கடாசலம் ஆகியோரது வீடுகளில் நேற்று தொடங்கி இன்று காலை வரை வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.
இதில் சங்கர் என்பவரது வீட்டில் எவ்வித பணம், ஆவணங்கள் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வெடியரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் நண்பர் வெங்கடாசலம், அவரது தந்தை செங்கோட்டையன் ஆகியோரின் வீடுகளிலும் தொடர்ந்து 12 மணி நேரமாகத் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் வருமானவரித் துறையினர் இந்தச் சோதனையில் சுமார் 35 லட்சம் மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்செய்யப்பட்டு திருச்செங்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இதற்கான உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேர்தல் சமயத்தில் திமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்வதற்காக நண்பர்கள் வீட்டில் பணம் பதுக்கிவைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் சோதனை நடைபெற்றதாக வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.