நாமக்கல்:அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான தங்கமணியின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் காலை 6.30 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செந்தில், குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்கிற சுப்ரமணியம், உறவினர் சிவா மற்றும் அவரது ஆதரவாளரான சேகர் ஆகியோரின் வீடுகளில் இந்த சோதனையானது நடைபெற்றன.
அதேபோல் நாமக்கல்லில் அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்கள் சத்தியமூர்த்தி இல்லம், அலுவலகம் மற்றும் நல்லிபாளையத்திலுள்ள தென்னரசுவின் அலுவலகலம், பெரியப்பட்டியில் உள்ள கோழி மருந்து விநியோகஸ்தர் ஸ்ரீதேவி இல்லம், பரமத்தி வேலூர் அடுத்த வெங்கரையில் அதிமுக இக்கிய அணியை சேர்ந்த விஜி, மணல் ஒப்பந்ததாரர் பொன்னர் சங்கருக்கு சொந்தமான இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தங்கமணிக்கு நெருக்கமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்றது. நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முன்னால் அமைச்சர் தங்கமணி மீதும் அவரது மனைவி சாந்தி மற்றும் அவரது மகன் தரணிதரன் மீது முதல் தகவல் அறிக்கையை முன்னதாகவே பதிவு செய்து இந்த சோதனையை நடத்தினர்.