தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முயற்சி இருந்தால் வறட்சி பூமியை வளமாக்கலாம்! - நிரூபித்த நாமக்கல் விவசாயி - farmer

நாமக்கல்: மொளியப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வறட்சி பூமியிலும் பேரீச்சை மரங்களை வைத்து வளர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

dates palm trees farmer

By

Published : Sep 4, 2019, 8:45 AM IST

Updated : Sep 4, 2019, 11:29 AM IST

பொதுவாகவே நாமக்கல் மாவட்டம் வறட்சி மிகுந்ததாக காணப்படுகிறது. இந்த நிலையில், இம்மாவட்டத்தில் மொளியப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி க. கணேசன் என்பவர் இதுபோன்ற வறட்சி பூமியிலும் பேரீச்சை மரங்களை வைத்து வளர்க்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

திசு வளர்ப்பு முறையை கையிலெடுத்த விவசாயி கணேசன்

இவர் கலிஃபோர்னியா, லண்டன் போன்ற இடங்களிலிருந்து பேரீச்சை மரக் கன்றுகளை வரவழைத்து திசு வளர்ப்பு முறையில் எட்டு ஏக்கரில் நடவு செய்துள்ளார். 420-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்து தற்போது அறுவடை செய்துவருகிறார். குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் மட்டுமே பேரீச்சை மரங்கள் நல்ல விளைச்சலை வழங்கிவரும் வேளையில், நாமக்கல் போன்ற இடங்களிலும் பேரீச்சை மரங்களை வைத்து புதிய சாதனை படைத்துவருகிறார் விவசாயி கணேசன்.

பூத்துக் குலுங்கும் பேரீச்சை

இது குறித்து கணேசன் கூறும்போது, எட்டு ஏக்கர் பரப்பளவில் 420 மரக்கன்றுகள் நடப்பட்ட இந்த பேரீச்சை மரமானது ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பாளைவிட்டு வளரத் தொடங்கும். அதன்பின் இந்த பாளையில் செயற்கை முறையில் மகரந்தச் சேர்க்கை செய்தால் மட்டுமே பேரீட்சை காய்கள் திரட்சியாக பிடிக்கும் என்றார்.

எவ்வாறு மகரந்தச் சேர்க்கை முறை?

இதற்காக பேரீச்சை மரத்தில் உள்ள பெண் பூவில் ஆண் பேரிச்சை மலர்களை சேர்த்துக் கட்டிவைத்து அறுவடைக்கு தயார் செய்வதாக கூறிய அவர், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பேரிச்சை அறுவடைக்கு தயாராக இருக்கும் என்றார். நல்ல விளைச்சலுக்கு வரும் ஒரு பேரீச்சை மரம் 150 கிலோ முதல் 200 கிலோ வரை செங்காய் பேரீச்சை பழங்களைத் தரும் எனவும் தெரிவித்தார்.

முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் நிரூபித்த நாமக்கல் விவசாயி

மேலும் இந்த பேரீச்சை கிலோ ரூ. 400 வரை விற்கப்படுவதாக சொன்ன கணேசன், நாமக்கல் போன்ற வறட்சியான மாவட்டங்களில் நீர்த் தேவை, வெயில் தேவை உள்ள நிலையில் பேரீச்சை மரத்தை வளர்ப்பது சவாலான விவசாயமாக இருந்தாலும் தன்னுடைய தொடர் முயற்சியால் பேரீச்சம்பழம் மரத்தை வளர்த்து மரம் ஒன்றுக்கு செலவுகள் போக 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற முடியும் எனத் தெரிவித்தார். எனவே இந்தத் தொழிலில் புதிதாக ஈடுபடும் விவசாயிகள் இதுபோன்ற தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முயற்சி இருந்தால் வறட்சி பூமியையும் வளமாக்கலாம்

இது குறித்து அங்கு பணிபுரியும் தொழிலாளி செல்வி கூறுகையில், தினந்தோறும் பேரீச்சை மரங்களில் வண்டுகள், பறவைகள் தாக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார். தினமும் கூலியாக 250 ரூபாய் கிடைப்பதாக கூறிய அவர், மிகவும் மகிழ்ச்சியாக இதனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மரங்களை பராமரிக்கும் பெண் செல்வி

முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நாமக்கல் மாவட்டம் மொளியப்பள்ளி விவசாயி கணேசன் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.

Last Updated : Sep 4, 2019, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details