தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து விபத்து; இருவர் உயிரிழப்பு! - நாமக்கல் விபத்து செய்தி

Namakkal cylinder fire accident: நாமக்கல்லில் சிலிண்டர் கசிவை சரி செய்ய முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டு 2 நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Namakkal cylinder fire accident
நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: இருவர் பலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 2:14 PM IST

நாமக்கல்லில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: இருவர் பலி!

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அக்ரஹாரம் வீதியில் வசித்து வந்தவர்கள், பார்த்தசாரதி (76) - லதா தம்பதி. இவர்களது வீட்டில் சிலிண்டர் காலியான நிலையில், புதிதாக சிலிண்டர் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று தனியார் கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் சிலிண்டரை பார்த்தசாரதியின் வீட்டிற்கு விநியோகம் செய்துள்ளார்.

அப்போது பார்த்தசாரதியின் வீட்டின் அருகே வசித்து வந்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் லட்சுமி நாராயணனின் மனைவி தனலட்சுமி, தங்களது வீட்டில் உள்ள சிலிண்டர் கடந்த சில நாட்களாக கசிவு ஏற்பட்டதாகவும், அதனை சரிசெய்து தருமாறு கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அருண்குமார் சிலிண்டர் ரெகுலேட்டரை நீக்கி கத்திரிக்கோல் கொண்டு கேஸ் கசிவை சரி செய்ய முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் அதிகளவில் கசிந்து, சிலிண்டரில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது‌. இதில் படுகாயமடைந்து அலறியடித்துக் கொண்டு அருண்குமார் வெளியேறிய நிலையில், தனலட்சுமி தீக்காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள், நாமக்கல் தீயணைப்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கேஸ் கசிந்து எரிந்த கொண்டிருந்த சிலிண்டரை அணைத்து லாவகமாக வெளியே எடுத்து கேஸ் கசிவை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தனலட்சுமி இருந்த அறை மற்றும் பார்த்தசாரதி வசித்து வந்த வீடு ஆகியவற்றில் தீ முழுவதும் எரிந்து வந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து அங்கிருந்த புகையை வெளியேற்றினர்.

பின்னர் தனலட்சுமி, பார்த்தசாரதி மற்றும் அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனலட்சுமி மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அருண்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தனலட்சுமி வீட்டில் கேஸ் கசிவை சரி செய்ய அருண்குமார் கூர்மையான பொருளை வைத்து கேஸை வெளியேற்றியுள்ளார் என்பதும், அப்போது வீடு முழுவதும் கேஸ் பரவி உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் வீட்டில் இருந்த விளக்கின் மூலம் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அருண்குமார், உடனடியாக அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த தனலட்சுமி, அருகில் இருந்த பார்த்தசாரதியின் வீட்டினுள் நுழைந்ததாக தெரிகிறது.

அப்போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சமையல் அறைக்குள் புகுந்துள்ளார். குறுகலான பகுதியில் வீடு அமைந்ததாலும், தனலட்சுமி உடல் தீப்பற்றி எரிந்ததாலும் புகை முழுவதும் பார்த்தசாரதியின் வீட்டினுள் பரவியதாக தெரிகிறது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட பார்த்தசாரதி மயக்கமடைந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது சிலிண்டர் கசிவை சரி செய்ய முயன்றபோது தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

இதையும் படிங்க: Leo Trailer: அஜித் படத்தைக் கொண்டு விஜய் படம் வரைந்த ஓவியர்!

ABOUT THE AUTHOR

...view details