தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகரிடம் மோசடி செய்த ராசிபுரம் கவுன்சிலர்.. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!

Rasipuram Councilor Issue: திமுக பிரமுகரிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த ராசிபுரம் பெண் கவுன்சிலரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராசிபுரம் பெண் கவுன்சிலர் சசிரேகா
ராசிபுரம் பெண் கவுன்சிலர் சசிரேகா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 10:57 AM IST

நாமக்கல்:மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளரும், கவுன்சிலருமானவர் செல்லவேல். இவர் நாமக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “ராசிபுரம் 12வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக உள்ள சசிரேகா, அவரது கணவர் சதீஷ், சதீஷின் தந்தை வெங்கடாசலம் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆகினர்.

முதலீடு செய்பவர்களுக்கு பாதி விலையில் கார்: அவர்கள் ஏரியல் ட்ரோபோடிக்ஸ் (ARIAL TROBOTICS) என்ற பெயரில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் போன்றவற்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, சுற்றுலாவிற்குப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு பாதி விலையில் கார்களை வாங்கித் தருவதாக தெரிவித்தனர். அதனை நம்பி உறவினர்களிடமும், நண்பர்களிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் கடனாகப் பெற்று, அதனை சதீஷிடம் கொடுத்தேன்.

கவுன்சிலருக்கு சம்மன்:ஆனால் கூறியபடி கார்களை பாதி விலையில் எனக்கு வழங்கவில்லை. அதனால், நான் கொடுத்த பணத்தை திரும்பி வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குற்றப் பிரிவு போலீசாரிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சசிரேகாவுக்கும், அவரது கணவர் சதீஷ்-க்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் சதீஷும், அவரது மனைவி சசிரேகாவும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

5 மணி நேரம் விசாரணை:இதனால் நேற்று (நவ.14) ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்த கவுன்சிலர் சசிரேகாவை, குற்றப்பிரிவு போலீசார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரது கணவர் சதீஷை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கவுன்சிலர் சசிரேகா 5 மணி நேரம் விசாரணை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பணத்தை திருப்பித் தர ஒப்புதல்: போலீசார் விசாரணையில், செல்லவேலிடம் தனது கணவர் வாங்கிய பணத்தை திருப்பித் தர 10 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்ததாகவும், அதனை புகார்தாரர் செல்லவேலும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சசிரேகாவின் கணவர் சதிஷ்-க்கு குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கி உள்ளதாகவும், அவருடன் சசிரேகாவும் சேர்ந்து ஆஜராக வேண்டும் என்று போலீசார் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கவுன்சிலர் சசிரேகா, நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தலில் திமுக தனக்கு போட்டியிட சீட்டு வழங்காததால் அதிருப்தி அடைந்து ராசிபுரம் 12-வது வார்டில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:போதையில் ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..!

ABOUT THE AUTHOR

...view details