தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாமக்கல் வழக்கறிஞர் கொலை 4 பேர் கைது.. காவல் துறையிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் என்ன? - Namakkal News in Tamil

Namakkal Advocate Murder: நாமக்கல் வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், "6 சவரன் நகையை திருடியதாக பெண்ணை தாக்கியதற்காகவே வழக்கறிஞர் மணிகண்டனை தீர்த்துக் கட்டினோம்" என வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 4:31 PM IST

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). வழக்கறிஞரான இவர் பணியை முடித்துவிட்டு நவ.3 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், செல்லிபாளையம் ஏரிக்கரை அருகே இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உயிரிழந்த வழக்கறிஞர் மணிகண்டனின் உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து நாமக்கல் டிஎஸ்பி தனராசு தலைமையிலான 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு கொலையாளிகளை தீவிரமாக வலைவீசித் தேடி வந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(29), சிவா(26), பவித்திரத்தை சேர்ந்த இளையேந்திரன்(29) வரகூரை சேர்ந்த மகேஷ்(31) ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:ராசிபுரத்தில் கார் விபத்து: கொல்லிமலை வனக்காவலர் உட்பட 3 பேர் பலி!

இதில், கொலை செய்யப்பட்ட மணிகண்டன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் மகேஷ் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மணிகண்டன் வீட்டில் 6 சவரன் தங்க சங்கிலி திருடு போய் உள்ளது. இதில் மகேஷ் மனைவி மகாலட்சுமிக்கு தொடர்புள்ளதாக கூறி அவரை மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதுகுறித்து காட்டுப்புத்தூரில் உள்ள தனது மைத்துனர் குமரேசனிடம் மகேஷ் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து தட்டிக்கேட்ட போது, அவர்களையும் மணிகண்டன் அடித்து உதைத்துள்ளார்.

எனவே, அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்து மணிகண்டன் செல்லும் இடங்களிலெல்லாம் பின் தொடர்ந்து தோட்டமிட்டுள்ளனர் . இந்த நிலையில், நவ.3 ஆம் தேதி இரவு மகேஷ், குமரேசன், சிவா, இளையேந்திரன் ஆகிய நான்கு பேரும் இணைந்து திட்டமிட்டபடியே, வழக்கறிஞர் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும், போலீசார் சேந்தமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் இன்று (நவ.10) ஆஜர்படுத்தினர். இதனையடுத்து நான்கு பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நால்வரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:தீபாவளி சீட்டு மோசடி; ரூ. 3 கோடியை சுருட்டிய சகோதரர்கள் தலைமறைவு - 100க்கும் மேற்பட்டோர் புகார்!

ABOUT THE AUTHOR

...view details