நாமக்கல்: தழிழ்நாட்டில் கரோனா தொற்றை குறைப்பதற்காக மதுபான கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. இதனால் மது பிரியர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் பரமத்திவேலூர் அடுத்த புதுவெங்கரை அம்மன் கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சி வருவதாக பரமத்திவேலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் புது வெங்கரை அம்மன் பகுதியில் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் தோட்டத்தின் மையப்பகுதியில், குடிசை அமைத்து, சாராயம் காய்ச்சி வந்தது தெரிந்தது. இதனையடுத்து 300 லிட்டர் ஊறல் சாராயத்தை காவல்துறையினர் அழித்தனர். மேலும் 18 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கள்ளிபாளையத்தை சேர்ந்த சசிமணி (25) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் குழந்தைவேல் (51) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு!