நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமையான இன்று நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, மோகனூர், ஆண்டாபுரம், களத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலங்களில் சாகுபடி செய்த 10 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று கடந்த வாரம் ஏலம் எடுத்த எட்டு பருத்தி மூட்டைகளை கூட்டுறவு சங்க நிர்வாகம் தங்களுக்கு ஒப்படைக்காத வரை யாரும் பருத்தி ஏலம் எடுப்பதில்லை என ஒருமித்த முடிவுடன் வியாபாரிகள் அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திற்கும், வியாபாரிகளுக்கும் உள்ள பிரச்சனையில் தங்களை வஞ்சிப்பதை கண்டித்து நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.