நாமக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்று வேகமாகப் பரவிய நிலையில் ஹாட் ஸ்பாட்டாக மத்திய அரசு அறிவித்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக இருந்த நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு 59 ஆக உயர்ந்தது.
நாமக்கல்லைச் சேர்ந்தவரும் சென்னையில் வேலை பார்த்து வரும் இளைஞருக்கு கடந்த 21ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி மற்றும் மாமனாருக்கும் கடந்த 23ஆம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அனைவரும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி இதனையடுத்து நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்களிடம் சுகாதார துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஏற்கெனவே நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் வசித்து வரும் எதிர் வீட்டைச் சேர்ந்த தாய், மகன், மருமகள், 6 மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்கள் அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து அனைவரும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கெனவே அப்பகுதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு சேந்தமங்கலம் - இராசிபுரம் பிரதான நெடுஞ்சாலையை மூடி, சீல் வைக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் 24 மணி நேரமும் வருவாய்த் துறையினரோடு, காவல் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ஆய்வு!