நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் தனியார் மருத்துவக் கிளினிக் நடத்தி வருபவர் மருத்துவர் ஜெயக்குமார்.
நேற்று கொல்லிமலையை சேர்ந்த லாரி ஓட்டுனரான சின்ராசு என்பவர் கடுமையான தொண்டைவலி, சளி மற்றும் காய்ச்சலுடன் மருத்துவர் ஜெயக்குமார் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் ஜெயக்குமார், அந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சமீபத்தில் லாரியில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதிக்கு சென்று வந்தது தெரியவந்தது.
மருத்துவர் ஜெயக்குமார் கிளினிக் இதனால் அவருக்கு, கரோனா பாதிப்பு இருக்கும் என அச்சமடைந்த மருத்துவர், ஓட்டுனர் குறித்து மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் தெரிவித்து, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சின்ராசுவை அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ராசு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓட்டுனர் சினராசுக்கு கரோனா தொற்று இல்லை எனவும், சாதாரண காய்ச்சல் எனவும் தெரிவித்து ஓட்டுனரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஓட்டுனரை முதன்முதலில் பரிசோதனை செய்த மருத்துவர் ஜெயகுமார், தனக்கும் கரோனா வைரஸ் தாக்கக்கூடும் என்ற அச்சத்தில், தன்னுடைய கிளினிக்கில் நோயாளிகள் யாரும் வர வேண்டாம் எனவும், கிளினிக்கில் பணிபுரியும் 7 பேருடன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும் மருத்துவமனை, இரத்த பரிசோதனை நிலையத்திற்குள் யாரும் நுழைந்து விடாத படி, தடுப்பு வேலிகளை அமைத்தும் கயிறுகளை கட்டியும் தனிமை படுத்தி கொண்டார். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவர் ஜெயகுமார் கூறியதாவது; ஓட்டுனர் சின்ராசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீடி இலை பாரம் ஏற்ற மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள வடுசா பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே அவருக்கு காய்ச்சல் சளி ஏற்பட்டதால், அங்கு சிகிச்சை பெற்று கொண்டு, நாமக்கல் வந்த நிலையில் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்த நிலையில் அவர் தனது மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த நிலையில் கரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் மாவட்ட சுகாதார துறையின் அறிவுறுத்தலின் பேரில் தங்களது மருத்துவமனையில் பணியாற்றி வரும், தான் உட்பட 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 7 பேரும் மருத்துவமனையிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'சும்மா சும்மா வராங்க' கோவிட்-19 பரிசோதனையிலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்த ஆந்திர இளைஞர்!