கரோனா பெருந்தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, வெளியில் நடமாடுவோர் அனைவரும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில் முகக் கவசம் அணியாமல், வெளியே நடமாடுவோருக்கு 100 ரூபாய் வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் மருந்தகம் மட்டுமன்றி, பெட்டிக் கடை முதல் பல சரக்கு மளிகை கடை வரை அனைத்து இடங்களிலும் முகக் கவசங்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. 5 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிற இந்த முகக் கவசங்களில் குழந்தைகளை, பெரியவர்களை கவரும் கார்ட்டூன் பொம்மைகள், ஓவியங்களும் அச்சிடப்பட்டு வந்துள்ளன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில், 'உங்கள் முகத்தையே முகக் கவசமாக மாற்றித் தருகிறோம்' என அறிவித்துள்ளனர். 'பாஸ்போர்ட்' அளவு புகைப்படம் கொடுத்தால், அதில் உள்ள படத்தையே முகக் கவசத்தில் 3டி தொழில்நுட்பத்தில் அச்சிட்டு தருகின்றனர்.
இது குறித்து, போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் குமரேசன் கூறுகையில், “முகக் கவசம் அணிந்து செல்லும்போது, முகம் பாதியளவு மறைந்து விடுகிறது. இதனால் அவரவர் முகத்தையே அச்சிட்டு முகக் கவசம் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்தால் பத்து நிமிடத்தில் அவரவர் முகம் அச்சிட்டு வழங்கப்படும். இந்த முகக் கவசங்கள் 'பாலி காட்டன்' துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. தினசரி துவைத்தாலும் முகக் கவசத்தில் அச்சிட்டுள்ள முகம் அழிவதில்லை. அவரவரின் முகமே அச்சிட்டு தருவதால் நாமக்கல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாளொன்றுக்கு 100 முகக் கவசங்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்றார்.
ஊரடங்கால் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் குறைந்துவிட்டதால் புகைப்படத் தொழில் முடங்கிப்போயிருந்தது. இந்நிலையில், மக்களை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்படும் இத்தகைய புதுமையான முகக் கவசங்களை விற்பனை செய்து வருமானத்திற்கு வழிவகை செய்துள்ளனர்.