நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை, சாரண சாரணியர் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாஇன்றுநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்றது.
சுற்றுச்சூழலை காக்க நாமக்கல்லில் மரக்கன்றுகள் நடும் விழா! - ஆசியா மரியம்
நாமக்கல்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத சாரண சாரணியர் பயிற்சித் திடலில் அரசு சார்பில் வேம்பு, புளி உள்ளிட்ட நிழல் தரும் பல்வேறு வகையான நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.உஷா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ஶ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்து தொடங்கிவைத்தனர்.
பின்னர் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர், 'சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து இதுபோன்று நிகழ்வு அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.
மேலும், பாரத சாரண சாரணிய இயக்கத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகள் தற்போது தற்காப்புக் கலை பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி, வாழ்வியல் நெறிமுறைகள் உள்ளிட்ட பயிற்சிகளை கற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சிகளை பள்ளிக் கல்வித் துறை சார்பில் அளிக்க வேண்டும். இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.