நாமக்கல்:சிலுவம்பட்டியில் உள்ள அருந்ததியர் காலனிக்கு நேற்று (ஜூலை 02) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வீதிகளில் அருந்ததியர் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்குள்ள படித்த இளைஞர்களை சந்தித்து ஆட்சி குறித்த கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிந்தார். அவர்கள் செய்யும் வேலைகள் குறித்தும் அங்கிருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.
அப்போது முதலமைச்சரிடம் மருத்துவர் ஜெயபிரகாஷ் தான் 2020இல் ஹோமியோபதி மருத்துவம் பயின்று முடித்ததாகவும் தனக்கு பணி கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தார். அவரது நிலையை உணர்ந்த முதலமைச்சர் உதவுவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் இன்று (ஜூலை03) ஜெயபிரகாஷிடம் தனியார் கல்லூரியில் பணிபுரிவதற்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.
அதேபோல் சிலுவம்பட்டி அருந்ததியர் காலனியில் குடிநீர் இணைப்பு மற்றும் மழைநீர் வடிகால் வசதியுடன் கான்கிரீட் சாலை வேண்டும் என அப்பகுதியினர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி 27 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க:'திராவிட மாடல் என்றால் என் முகம்தான் நினைவுக்கு வரும்' - பூரிப்புடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்