நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கிரிவலப்பாதை பிரிவில் இம்மானுவேல் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. தேவாலயத்தின் அருகில் வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிரிவல விரிவாக்க பாதை அமைப்பதற்காகச் சாலை விரிவாக்கத்திற்கு இந்த ஆலயத்தின் ஒரு பகுதியை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த இடத்தை காலி செய்து சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை அந்த இடத்தில் இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டுள்ளனர். இதற்கு கிறிஸ்தவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரைப் பெற்ற காவல்துறையினர், அங்கிருந்து பிள்ளையார் சிலையை எடுக்குமாறு இந்து அமைப்பினரிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் இந்து சமய அறநிலையத் துறை இடத்தில் தான் இந்தச் சிலையை அமைத்துள்ளோம். சட்டவிரோதமாக கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்திருந்தார்கள் என இந்து அமைப்பினரும், பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.