நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி வரை காவலை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவு இந்நிலையில் கைதானவர்கள் 11 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் காவல்துறையினர் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட 11 பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளிகள் 11 பேரையும் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.