ராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் மகளிர் காவல் துறையினர் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும், கைதானவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி இவ்வழக்கினை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தார்.