நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலி அமுதா, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இந்தக் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோர் இருப்பது தெரியவந்தது. அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூருவைச் சேர்ந்த ரேகா, கார் ஓட்டுநர் நந்தக்குமார், கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தையை விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரிவந்தது.