மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை வெற்றிபெற செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன்,
'தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எந்த ஒரு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பல நேரங்களில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்தியை திணிப்பதற்கான கட்டாயத்தில் அதற்கான முயற்சிகள் செய்தாலும் எப்போதும் வெற்றிபெற்றது கிடையாது.
விருப்பம் உள்ளவர்கள் இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஒருபோதும் இந்தியை கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே மத்திய அரசு இதுபோன்ற எண்ணங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் நாமக்கலில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் எடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட 37 எம்.பி.க்களும் தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் தற்போது திமுக கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள அனைத்து எம்பிக்களும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக கேட்டுப்பெற்று உரிமையை மீட்டுத் தருவார்கள்' என அவர் கூறினார்.