கடந்த ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பழைய மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை அழிப்பது தொடர்பான ஸ்கார்பேஜ் பாலிசி ஒன்றை வெளியிட்டார். அதில் சொந்த பயன்பாட்டில் உள்ள கார் மற்றும் பைக்குகளை, அதை வாங்கிய தேதியில் இருந்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் தான் பயன்படுத்த முடியும். அதன்பிறகும் வாகனம் நல்ல நிலையில் இருந்தால், மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும். அதே போல் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பி.எஸ்.6 என்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகம் ஆகத் தொடங்கியிருப்பதால், 15 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ்.4 அல்லது அதற்கு குறைவான வெர்ஷன் கொண்ட என்ஜின் உடைய வாகனங்களை, மறுபதிவு செய்து ஓட்ட அனுமதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு லாரி தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும், இது பெரு நிறுவனங்களுக்கும், பெரு முதலாளிகளுக்கும் சாதகமாக அமையும் எனவும் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடும் உழைப்பின் மூலம் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை கொண்டு ஒரு லாரியை வாங்கி ஓட்டி வருவதாகவும், திடீரென 15 ஆண்டுகள் ஆன லாரிகளை பழைய இரும்புக் கடைக்கு போட்டு விட வேண்டும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், வேறு தொழிலுக்குதான் செல்ல வேண்டும் எனவும் அவர்கள் புலம்புகின்றனர்.